
கோலாலாம்பூர், மே-30-IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தின் மூத்த நிபுணர், பேராசிரியர் டத்தோ ஸ்ரீ Dr Jeffrey Jeswant Dillon , உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தொராசிக் அறுவை சிகிச்சை சங்கமான AATS-சின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியராக வரலாறு படைத்துள்ளார்.
உலகளாவிய அளவில் மிக உயரிய மருத்துவப் பங்களிப்பை வழங்கும் முன்னணி நிபுணர்களுக்கு மட்டுமே இந்த AATS அமைப்பில் உறுப்புரிமை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், சிக்கலான இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சைகளில் சிறந்து விளங்குகிறார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கில் உயர்கல்வி பெற்ற இவர், மலேசிய இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.
இந்த அனைத்துலக அங்கீகாரமானது, மலேசியாவின் மருத்துவத் துறையை உலக வரைபடத்தில் கொண்டு சேர்த்துள்ளது என்றும், இதன் மூலம் நமது நாட்டின் இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அனைத்துலக அளவிலான பல புதிய பயிற்சி வாய்ப்புகள் கதவுகள் திறக்கும் என்றும் Dr Jeswant பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தத் தேர்வு, மலேசியாவின் மருத்துவத் துறைக்கே பெருமையாகும்.



