ஜொகூர் பாரு, மே-18 – ஜொகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆடவன், யாருடைய தூண்டுதலும் இன்றி சுயமாகவே அதில் ஈடுபட்டுள்ளான்.
அது எந்தவொரு கும்பலின் திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அத்தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் 46 பேரை விசாரித்ததில் அவ்விஷயம் கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய ஆடவனும் அவன் குடும்பமும் சமூகத்துடன் சேராமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆக ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு அத்தாக்குதலை நடத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
எனவே பொது அமைதிக்கு பெரிதாக கேடு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தலைக் கொண்டு வருவதாக அத்தாக்குதலைச் சித்தரித்து யூகத்தின் அடிப்படையில் தகவல் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை இரு போலீஸ்காரர்கள் உயிரிழக்கும் அளவுக்கு தாக்குதல் நடத்திய ஆடவன் Jemaah Islamiah அமைப்பைச் சேர்ந்தவன் என முன்னதாக தகவல்கள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ்காரர்களைத் தாக்கி மரணம் விளைவித்த 21 வயது அவ்விளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
அச்சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
அத்தாக்குதல் தொடர்பில் 7 சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படுகிறது.