கோலாலம்பூர், ஜூலை 11 – PADU எனப்படும் அரசாங்கத்தின் முதன்மை தரவுத் தளம், எதிர்காலத்தில் சமூகப் பொருளாதாரத் திட்டங்களை மேம்படுத்தும் முயற்சியில் பல்வேறு அரசு நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக வளங்களை மேம்படுத்துதல், கசிவுகளைக் குறைத்தல் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கும் அது பயனாகும் என பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
செயல்பாட்டுத் தேவைகளை உருவாக்குவதையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது; தற்போதைக்கு முக்கிய செயல்பாட்டுத் தேவைகளில் ஒன்றாக இலக்கிடப்பட்ட மானிய விநியோக முறை விளங்குவதாக அவர் சொன்னார்.
இலக்கிடப்பட்ட மானிய முறைக்கான தரவுகளைச் சேகரிப்பதிலும், அதன் செயலாக்கத்திற்கும் அரசாங்கம் எப்படி தயாராகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ரஃபிசி மக்களவையில் அவ்வாறு பதிலளித்தார்.
PADU அமைப்பை மேம்படுத்தியிருப்பதன் வாயிலாக, தரவுகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய முடியும்.
அதோடு, புதுப்பித்தலுக்கு அவசியமின்றி நிகழ்நேர முறையில் (real-time) அதனை இயக்கவும் முடியுமென அமைச்சர் சொன்னார்.
PADU அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலையைப் பார்த்தோமானால், அரசாங்கம் அறிவிக்கும் உதவித் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், பல்வேறு அரசு இலாக்காக்களை கடந்து வர வேண்டியிருக்கும்.
உள்நாட்டு வருமான வரி வாரியம் (LHDN) தொடங்கி சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) வரை ஒவ்வொரு துறையாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் ஒரு நீண்டதொரு பயணமாக அது இருந்தது.
ஆனால், PADU-வின் வருகைக்குப் பிறகு அந்நிலை மாறி, ஓரிட தகவல் மையமாக அது விளங்குகிறது.
இதனால் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான நேரமும் காலமும் மிச்சமாகி, சேவையளிப்பும் எளிதாக்கியிருப்பதை ரஃபிசி சுட்டிக் காட்டினார்.