Latestமலேசியா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு ; 200 கிலோமீட்டர் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கினார் சையிட் சாடிக்

கோலாலம்பூர், ஜூன் 28 – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், நாடாளுமன்றத்தை நோக்கி தனது 200 கிலோமீட்டர் ஓட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.

மூவாரிலிருந்து, அதிகாலை மணி 6.30-க்கு ஓட்டத்தை தொடங்கியதாக, அந்த முன்னாள் இளைஞர் விளையாட்டு அமைச்சர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரை சில நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்வதையும், அந்த பதிவில் காண முடிகிறது.

முன்னதாக, மூவாரிலுள்ள, சுல்தான் இப்ராஹிம் பாலத்திலிருந்து, தெலுக் மாஸ் வரை 39 கிலோமீட்டர் ஓட்டத்தை தொடங்கப்போவதாக, சையிட் சாடிக் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பில் அறிவித்திருந்தார்.

இன்று மாலை மணி ஐந்து வாக்கில், அவர் தெலுக் மாஸ்சிலிருந்து, மலாக்கா, அலோர் காஜா வரை 34 கிலோமீட்டர் ஓட்டத்தை தொடர்வார்.

நாளை காலை அலோர்காஜா – ரெம்பாவ், மாலையில் ரெம்பாவிலிருந்து சிரம்பான் ஆகிய இடங்களுக்கு அவர் ஓடுவார்.

ஞாயிற்றுகிழமை, சிரம்பானிலிருந்து செமிஞ்சே பின்னர் செமிஞ்சேவிலிருந்து தலைநகர், துன் ஹுசைன் ஓன் வந்தடைவார்.

திங்கட்கிழமை அதிகாலை மணி 6.30 வாக்கில், அங்கிருந்து ஓட்டத்தை தொடங்கும் அவர் காலை மணி ஒன்பதுக்கு நாடாளுமன்றம் சென்றடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நிதி திரட்டும் வகையில், “லங்கா மூவார்” எனும் அந்த ஓட்டத்தை சையிட் சாடிக் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!