கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – இந்த ஆண்டும் மாபெரும் ஜாலூர் கெமிலாங் கொடியைப் பறக்க விடுவதற்கான நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை கோலாலம்பூர் கோபுரத்தில் நடைபெறவிருக்கிறது.
மக்களிடையே தேசப் பற்றை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டின் அடையாளமான 421 மீட்டர் உயர கோபுரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாக அதிகாரி நஸ்லி சாட் கூறினார்.
காலை 9 மணிக்கு ஆகஸ்ட் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ஒன்று கூடி அனைத்து மலேசியர்களும் அதரவளிக்க வேண்டும் என்று அவர் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டு தேசிய மாதத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி மலேசிய தினம் வரை நடைபெறும் சிறப்பு நடவடிக்கைகளின் நுழைவு டிக்கெட்டுகளுக்கு 60 சதவீத தள்ளுபடி வழங்கும் விளம்பரத்தையும் கோலாலம்பூர் கோபுரம் வெளியிட்டது.
அதில் தேசியக் கொடியின் வண்ணங்களைக் கொண்ட கோபுரத்தின் விளக்குகள் ஒளியிடுதல் நிகழ்ச்சி, சுதந்திர தினக் கவிதைப் போட்டி, பாரம்பரிய விளையாட்டு அறை, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பங்கேற்கக் கூடிய பிற நிகழ்ச்சிகளும் அடங்கும்.
இந்நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களை கோலாலம்பூர் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களில் காணலாம்.