
காட்மண்டு, அக்டோபர்-6,
கடுமையான பனிச்சூறாவளியால், திபெத்தின் எவரெஸ்ட் மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள முகாம்களில், சுமார் 1,000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மீட்பு குழுக்கள் 4,900 மீட்டர் உயரத்தில் பனி அடைத்த பாதைகளை அகற்றி வருகின்றனர்.
இதுவரை சுமார் 350 பேர் மீட்கப்பட்டு, குடாங் (Qudang) நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மீண்டவர்கள் கடும் குளிர் மற்றும் ஈரப்பதம் காரணமாக hypothermia எனப்படும் உடல் வெப்பக் குறைவுக்கு ஆளாகியுள்ளனர்.
பல கூடாரங்கள் பனியில் இடிந்து விழுந்ததாகவும், சிலர் ஏற்கனவே உடல் உறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் எவரெஸ்ட் அழகுக் காட்சிப் பகுதிக்கு நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இமயமலைப் பகுதியில் இவ்வாண்டு தொடரும் இயற்கைப் பேரிடர்களில் அடுத்தக் கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேப்பாளத்தில் கடும் மழையால் நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு 47 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் மாட்மோ (Matmo) சூறாவளி காரணமாக 150,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
8,849 மீட்டரில் உலகின் உயரமான சிகரமாக உள்ள எவரெஸ்ட், மலையேறிகளுக்கு இன்னமும் ஆபத்தான இலக்காகவே உள்ளது.