
புது டெல்லி, ஜூலை-12 – ஜூன் மாத அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 2 இயந்திரங்களும் செயலிழந்துள்ளன; இது விமானப் பயணங்களில் அரிதாய் நடப்பதாகும்.
இயந்திர செயலிழப்பால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.
அதுவும் குடியிருப்புக் கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே, விமானம் முற்றிலும் உருக்குலையக் காரணமாகும்.
15 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இந்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கையில் தீர்க்கமான முடிவேதும் இல்லையென்றாலும், விமானிகளுக்கு இடையில் நிலவிய குழப்பத்தை அது சுட்டிக் காட்டியுள்ளது.
விமானிகளின் அறையான cockpit-டில் கடைசி நேரத்தில் விமானிகளுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடல் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் “ஏன் எரிபொருளை cutoff செய்தாய்? ” எனக் கேட்கிறார்.
அதற்கு “நான் அப்படிச் செய்யவில்லை” என இரண்டாவது விமானி பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த விமான விபத்து புலனாய்வாளர்களும் பங்கெடுத்துள்ள இவ்விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-ஆம் தேதி ஏற்பட்ட அவ்விபத்தின் போது 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் புறப்பட்டது.
அதில் ஒரேயொரு பயணியைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்தது மருத்துவப் பயிற்சிக் கல்லூரியின் தங்கும் விடுதி என்பதால், அங்கும் ஏராளமானோர் மரணமடைந்தனர்.
மொத்த பலி எண்ணிக்கை 279 பேரை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.