கோலாலம்பூர், ஜூலை 8 – ஆன்லைன் துன்புறுத்தல் அல்லது பகடிவதை சம்பவங்கள், தனிநபர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு எதிராக ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை, சமூக ஊடக பிரபலமும், தன்னார்வலருமான ஈஷா என அழைக்கப்படும் இராஜேஸ்வரி அப்பாஹுவின் மரணம் நிரூபித்துள்ளது.
அத்தகைய துயரம் மீண்டும் நிகழாமல் இருக்க, உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஈஷா மரணத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை தொடர்பு அமைச்சு, இலக்கவியல் அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்பினர் உறுதிச் செய்ய வேண்டுமென யுனேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, இணைய பகடிவதை காரணமாக, கடந்த வாரம் தற்கொலை செய்துக் கொண்ட ஈஷாவின் குடும்பத்தாருக்கு யுனேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில், இணைய பகடிவதை சம்பவங்களை, கடுமையான குற்றமாக அரசாங்கம் வகைப்படுத்த வேண்டுமென, கெஅடிலான் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் தீபன் சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈஷாவின் துயர முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள தீபன், அதனை எதிர்கொள்ளும் திடத்தை, ஈஷாவின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் கடவுள் வழங்குவார் என தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்யவும், இணைய பகடிவதை சம்பவங்களை களையவும், அது தொடர்பான சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென, தாம் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சிலிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் தீபன் கூறியுள்ளார்.