கோம்பாக், ஜூலை-13 – அண்மையில் மறைந்த சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரி சந்தித்த இணையப் பகடிவதை குறித்து அவரின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஏஷா தொடர்பில் டிக் டோக்கில் வீடியோவைப் பதிவேற்றியதுடன் நேரலையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி 2 ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்மணிக்கு எதிராக 56 வயது புஷ்பா பி ராஜகோபால் புகார் செய்தார். அவர்களில் முன்னாள் போலிஸ் அதிகாரியும் ஒருவராவார்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சிலாங்கூர், கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் புகாரளிக்க வந்தவரிடம் சுமார் 2 மணி நேரங்கள் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடமான கோம்பாக் செத்தியா PPR அடுக்குமாடி குடியிருப்பு ஸ்தாப்பாக் போலிஸ் நிலையத்தின் அதிகாரத்துக்குள் வருவதால் புகார் அங்கு மாற்றப்பட்டது.
அம்மூவரின் எல்லை மீறியத் தொல்லையால், ஏஷா இரு முறை நெஞ்சு வலிக்கு ஆளானதாக, போலீஸ் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் புஷ்பா கூறினார்.
டிக் டோக் நேரலையில் என் மகளைப் பற்றி மிகவும் தவறாகப் பேசியுள்ளனர். ஒரு தாய் என்ற முறையில் என்னால் அதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என அவர் கேட்டார்.
என்னைப் போல் இன்னொரு தாயும் இதே வேதனையை அனுபவிக்கக் கூடாது. இணையப் பகடிவதை நிறுத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த போலீஸ் நடவடிக்கை எடுக்குமென தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
ஏஷா மரணம் தொடர்பில் போலீஸ் இதுவரை ஒரு பெண்ணையும் ஓர் ஆடவரையும் கைதுச் செய்து விசாரித்து வருகிறது.
டிக் டோக்கில் இரு நபர்களால் பகடிவதைக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்த மறுநாளே, ஏஷா உயிரை மாய்த்துக் கொண்டார்.