
கோலாலம்பூர், மார்ச்-20-ஒரு குறுகலான சாலையில் ஓடும் காரின் பின்னால் கயிற்றால் கட்டப்பட்டு நாய் ஒன்று இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி, சமூக ஊடகங்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொஞ்சமும் இரக்கமற்ற இச்சம்பவம் சபாவில் நடந்ததாக நம்பப்படுகிறது…
இழுத்துச் செல்லப்படும் போது, ஒரு கட்டத்தில் நாய் நிலைத் தடுமாறி கால்களைப் பரப்பிக் கொண்டு விழுவது பார்ப்பவரின் கண்களைக் குளமாக்குகிறது.
அந்தக் காரோட்டுநருக்கு கண்டனங்கள் குவியும் அதே வேளை, இக்காட்சிகளை பின்னாலிருந்து பதிவுச் செய்த மோட்டார் சைக்கிளோட்டி மீதும் மக்களின் கோபம் திரும்பியுள்ளது.
வீடியோ எடுத்த நேரத்தில், அக்காரை நிறுத்த அவர் முயற்சி செய்திருக்கலாம்… குறைந்தபட்சம் _ஹாரன்_ அடித்து காரோட்டிக்கு எச்சரிக்கையாவது கொடுத்திருக்கலாம்…
ஆனால் மும்முரமாக வீடியோ எடுப்பதைத் தவிர வேறெதனையும் அவர் செய்யவில்லை.
அந்த வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றும் எண்ணம் அவருக்கில்லாமல் போனதேன் என, வலைத்தளவாசிகள் குமுறி வருகின்றனர்.
ஒருவேளை காரோட்டியும் மோட்டார் சைக்கிளோட்டியும் கூட்டுக் களவாணிகளா? எனவும் சிலர் சந்தேகத்தை எழுப்பினர்.
அதை விட ஆச்சரியம் என்னவென்றால், இந்த வீடியோவைப் பதிவேற்றியவர், அதில் அந்தக் காரின் பதிவு எண் பட்டையை மறைத்திருப்பது தான்.
இது, பிராணிக்கு கொடூரம் இழைத்த காரோட்டியை பாதுகாக்கவா என கேள்வி எழுப்பிய பலர், அதுதான் நோக்கமென்றால் பிறகு எதற்குதான் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது என கேள்வி கேட்டனர்.
கருத்து பதிவிட்டவர்களில் ஒருவர் _”எனக்கு கூடத் தான் நாய்களைக் கண்டாலே பிடிக்காது, ஆனால் அதற்காக இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துகொள்ள மாட்டேன்”_ எனக் கூறியதும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, கால்நடை சேவைத் துறை ஆகியவற்றிடம் புகார் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
ஐந்தறிவு படைத்த மிருகங்களே என்றாலும்…ஓர் உயிர் துன்பப்படும்போது அதை வேடிக்கைப் பார்ப்பது மனிதம் அல்ல என்பதை இச்சம்பவம் நமக்கு மீண்டும் பாடமாக உணர்த்துகிறது…



