
கோலாலம்பூர், ஜனவரி-7,
கடந்தாண்டு, நாட்டில் மொத்தம் 9,528 பிறப்புப் பதிவுகளில் தாமதம் நடந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பதிவுச் செய்யப்படாத திருமணங்களே என, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதோடு, பெற்றோர் 60 நாட்களுக்குள் பிறப்பை அறிவிக்காததும், தேவையான ஆவணங்கள் முழுமையில்லாததும் இந்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதாக அவர் சொன்னார்.
சட்டப்படி, ஒரு குழந்தைப் பிறப்பு 60 நாட்களுக்குள் பதிவுச் செய்யப்பட வேண்டும்.
தாமதமானால், கூடுதல் நேர்காணல், ஆவணச் சான்றுகள், அதிகாரிகளின் ஒப்புதல் ஆகியவை தேவைப்படும்.
இதனால் குழந்தைகள் MyKid, கடப்பிதழ், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
எனவே, பிரச்னைகளைத் தவிர்க்க, திருமணத்தையும் குழந்தைப் பிறப்பையும் உடனடியாக பதிவுச் செய்யுமாறு பொது மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.



