ஜோகூர் பாரு, ஜூலை-12, Ah Long எனப்படும் வட்டி முதலைகள், தங்களிடம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்துவதற்காக, 400 ரிங்கிட்டில் இருந்து 700 ரிங்கிட்டுக்கு கூலிக்கு ஆட்களை வேலைக்கமர்த்துவது அம்பலமாகியுள்ளது.
வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு 700 ரிங்கிட்டும், சிவப்பு சாயம் வீசுவதற்கு 400 ரிங்கிட்டும் கூலியாகக் கொடுக்கப்படுகிறது.
அண்மையில் பிடிபட்ட அறுவர் கொண்ட கும்பலிடம் நடத்திய விசாரணையில் அது கண்டறியப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து, கைப்பேசிகள், மிரட்டல் கடிதங்கள், சிவப்பு சாயம் அடங்கிய டின்கள், முகமூடி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த அறுவரில் ஐவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.
அக்கும்பலின் தலைவன் facebook வாயிலாக வேலை வாய்ப்பு குறித்து விளம்பரம் செய்வான்; ஆர்வமுள்ளவர்கள் நேரில் சந்திக்காமலேயே தொடர்புக் கொண்டு வேலையை கச்சிதமாக முடித்து விடுகின்றனர்.
சிங்கப்பூரில் முன்பு வேலை செய்தவர்கள் அல்லது இப்போது வேலை செய்துக் கொண்டிருப்பவர்களை குறி வைத்து காய் நகர்த்தப்படுகிறது.
சொன்னபடி வேலை முடிந்ததும், ஆதாரமாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கைப்பேசிக்கு அனுப்பி, பேசியக் கூலியை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
அவர்கள் கைதாகியிருப்பதன் வாயிலாக, ஜோகூர், பஹாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கோலாம்பூர் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டும் சிவப்பு சாயமும் வீசப்பட்ட 24 சம்பவங்களுக்குத் தீர்வுக் காணப்பட்டுள்ளது.