கோலாலம்பூர், ஆக 8 – ஆறு ஆண்டுகளுக்கு முன் அரச மலேசிய கடற்படையில் இணைந்த ஒரு வாரத்திலேயே இறந்த தங்களது மகன் சூசைமாணிக்கத்தின் மரணம் ஒரு கொலை என ஈப்போ உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அது குறித்து சுயேட்சை அதிகாரிகளைக் கொண்டு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் சுயேட்சையான குழு வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என புக்கிட் அமான் போலீசிற்கு தங்களது வழக்கறிஞர் ஸைட் மாலேக்குடன் (Zaid Malek) சூசைமாணிக்கம் குடும்பத்தினர் இன்று மகஜர் சமர்ப்பித்தனர்.
இதனிடையே தமது சகோதர் சூசை மாணிக்கம் கடற்படை பயிற்சி தளத்திற்கு அனுப்பிய ஒரு வாரத்தில் இறந்தது தொடர்பாக முதலில் அதிகாரிகள் கூறிய தகவலை தாங்கள் நம்பியதாகவும் ஈப்போ உயர்நீதிமன்றத்தி மேல் முறையீடு செய்த பின்னர்தான் இந்த விவகாரம கொலையாக அறிவிக்கப்பட்டதால் அந்த முடிவை எங்களால் ஜீரணிக்க முடியவில்லையென சூசை மாணிக்கத்தின் சகோதரர் சார்ல்ஸ் தெரிவித்தார்.
இதனிடையே சூசைமாணிக்கம் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வழங்கப்பட்ட மகஜரில் அரசியல் கட்சிகளுடன் சுஹாக்காம் உட்பட பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களும் கையெழுத்திட்டுள்ளதாக சூசைமாணிக்கம் குடும்பத்தினரின் வழக்கறிஞர் Zaid Malek கூறினார்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதால் சூசைமாணிக்கம் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தும்படி அவரது தந்தை ஜோசப் மட்டுமின்றி மகஜர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கேட்டுக்கொண்டனர்.