கோலாலம்பூர், ஜூலை-26 – கடற்படை வீரர் சுல்ஃபார்ஹான் ஒஸ்மான் சுல்கார்நயின் (Zulfarham Osman Zulkarkain) கொலை வழக்கில் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் (UPNM) 6 முன்னாள் மாணவர்களை சாகும் வரை தூக்கிலிடும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) ஆட்சேபித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் பரிதாப மரணத்தால் அவரின் குடும்பத்தார் அடைந்துள்ள சொல்லொணா துயரத்தை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது; அது ஈடு செய்ய முடியா பேரிழப்பு; குற்றமும் மிக மிகக் கடுமையானது தான்.
ஆனால், நீதியை நிலைநாட்ட மரண தண்டனை ஒரு தீர்வல்ல என்பதை SUHAKAM வலியுறுத்த விரும்புவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாணையம் கூறியது.
அந்த அடிப்படையில், மரண தண்டனை அமுலாக்கத்தை மறுஆய்வு செய்யுமாறு அரசாங்கத்தை SUHAKAM மீண்டும் கேட்டுக் கொள்கிறது.
அனைவருக்கும் நியாயமான அதே சமயம் மனிதாபிமான தண்டனை முறையை நோக்கி நகர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என அவ்வாணையம் விளக்கியது.
ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறிருந்தால், தூக்குத் தண்டனையால் நிலைமைத் திரும்ப சரி செய்ய முடியாது; அந்நிலை மனித உரிமை மீறலாகும்.
எனவே, மரண தண்டனையை முழுமையாக ரத்துச் செய்து வரும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் இணைய வேண்டுமென்பதே தங்களின் எதிர்பார்ப்பு என SUHAHAM கூறியது.
சம்பந்தப்பட்ட அறுவருக்கும் இதற்கு முன் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 18 ஆண்டு கால சிறைத் தண்டனையை, கட்டாய மரண தண்டனையாக மாற்றி புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.