கோலாலம்பூர், மே 20 – தலைநகர், கம்போங் பாரு, ஜாலான் ராஜா மூசாங்கிலுள்ள, மளிகை கடை ஒன்றில், ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
அவ்வாடவனுக்கு எதிராக 14 பழைய குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் டெல்ஹான் யாஹ்யா தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில் நேற்று நண்பகல் மணி 12.08 வாக்கில், பாதிக்கப்பட்டவர் புகார் செய்ததை யாஹ்யா உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, அக்கொள்ளை சம்பவம் தொடர்பில் வைரலான காணொளி ஒன்றையும் போலீசார் அடையாளம் கண்டதாக யாஹ்யா சொன்னார்.
அதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், பிற்பகல் மணி 2.54 வாக்கில், கம்போங் பாரு, ஜாலான் டத்தோ அப்துல்லா யாசின் அருகே அவ்வாடவன் கைதானான்.
அவனிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 46 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பாராங் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வாடவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும், சிறுநீர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை ; கொள்ளை சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.