
சென்னை, செப்டம்பர்-29,
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40-தாக உயர்ந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோரில் நேற்றிரவு ஒருவர் மரணமுற்றார்.
இதையடுத்து, த.வெ.க கட்சியின் முக்கியத் தலைவர்களான அதன் பொதுச் செயலாளர் பஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மற்றும் வி.பி. மதியழகன் ஆகியோரின் பெயர்கள் கிரிமினல் குற்ற அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸார் கூறினர்.
பிரச்சாரக் கூட்ட அனுமதி 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், அதை விட 1 மடங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டதே அந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என போலீஸ் மேலும் கூறிற்று.
பலியானோரில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர்.
இத்துயரத்தால் இதயம் நொறுங்கி போயுள்ளதாகக் குறிப்பிட்ட விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, நேற்றே விசாரணைத் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடியும், இச்சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் கனவோடு களத்தில் இறங்கும் விஜய்க்கு இந்த எதிர்பாரா சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.