காஜாங், டிச 26 – காஜாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவறை கதவு பழுதடைந்ததால் , ஜன்னல் வழியாக வெளியேற முயன்றபோது, 33வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் வெளிநாட்டு மாணவி ஒருவர் இறந்து கிடந்தார்.
19 வயதான பாதிக்கப்பட்ட பெண் ஒரு பொது பல்கலைக்கழக மாணவி ஆவார். அந்த மாணவி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியின் நடைபாதையில் இரத்த வெள்ளத்தில் பொதுமக்கள் கண்டதைத் தொடர்ந்து போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாலை மணி 6.34 அளவில் தங்களது தரப்பிற்கு அவசர அழைப்பு வந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof ) தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் அந்த மாணவி இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
போலீஸ் தடயவியல் அதிகாரிகளும் விசாரணைக்கு உதவும் பொருட்டு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். இன்று காலை 10 மணிக்கு செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் முடிவுகளின்படி, உயரமான இடத்தில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள்தான் அவரது மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.