காசா, ஏப்ரல்-2,
காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையை இரு வாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம், அதனை முற்றாக அழித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளது.
78 ஆண்டு கால அம்மருத்துவமனை தற்போது நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், அகதிகள் ஆகியோரை உள்ளடக்கிய மயானமாகக் காட்சியளிக்கிறது.
அந்த அளவுக்கு, இனியும் பயன்படுத்த வாய்ப்பில்லாத வகையில் அது தரைமட்டமாகியுள்ளது.
ஷிஃவா என்றால் சிகிச்சையளிக்கும் வீடு என அர்த்தமாகும்; ஆனால் இஸ்ரேலியப் படையின் கொடூரத்தால் இப்போது அது இறப்பு வீடாகக் காட்சியளிப்பதாக காசா மக்கள் சோகத்துடன் கூறினர்.
வட காசாவில் கொஞ்சம் குடிநீரும் மின்சார வசதியும் கிடைக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில இடங்களில், இந்த அல் ஷிஃவா மருத்துவனையும் ஒன்றாகும்.
இதனால், இந்த இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காலத்தில் அவ்வளாகத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.
அல் ஷிஃவாவை முற்றுகையிட்ட இந்த இரு வாரங்களில் மட்டும், மருத்துவனைக்கு உள்ளேயும் வெளியேயும் என ஒரு பெண் மருத்துவர் உள்ளிட்ட 400 பேரை இஸ்ரேலியப் படை கொன்றிருப்பதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த 2 வாரங்களுக்கும் மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி உணவு, குடிநீரை கூட இஸ்ரேலியப் படை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என மனிதநேய அமைப்புகள் கூறுகின்றன.