
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்றிரவு மணி 9.44க்கு இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமக்கு அவசர அழைப்பு வந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நஸ்ரான் அப்துல் யூசோப் தெரிவித்தார். 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்ததாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
அந்த ஆடவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அந்த நபரின் மரணத்தில் இதுவரை எந்தவொரு குற்றச்செயல்களும் கண்டறியப்படவில்லையென நஸ்ரான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் மரணம் அடைந்தவர் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் எத்தனையாவது மாடியிலிருந்து விழுந்தார் என்பது குறித்தும் இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு அவரது இறப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நஸ்ரான் குறிப்பிட்டார்.



