கோலாலம்பூர், ஜூன் 27 – சிலாங்கூர், காஜாங் உத்தாமாவிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், கேபிள் கம்பிகளை திருடியதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன், கைது செய்யப்படுவதை தவிர்க்க தப்பி ஓட முயன்ற போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 23-வது மாடியிலிருந்து, கீழே விழுந்து உயிரிழந்தான்.
முன்னதாக, அவனும் மற்றொரு ஆடவனும், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் கேபிள் கம்பிகளை திருடுவதை, அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் பார்த்து விட்டதால், அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு இறங்கி தப்ப முயன்ற அந்த 29 வயது ஆடவன், தவறி விழுந்து உயிரிழந்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
அவனுடன் இருந்த மற்றொரு 31 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்ட வேளை ; அவனிடமிருந்து ஆறு செப்பு கம்பி சுருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்வாடவனுக்கு எதிராக எட்டு பழைய குற்றங்கள் இருப்பதும், உயிரிழந்த ஆடவனுக்கு எதிராக பத்து பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றவியல் சட்டம் மற்றும் அபாயகர போதைப் பொருள் சட்டங்களுக்கு கீழ், அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.