கோலாலம்பூர், ஜூலை-25-சிறார்கள் உட்பட காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை போலீஸ், கோப்புகளை மூடாது.
நீண்ட காலம் பிடித்தாலும், தேடும் பணியிலிருந்து போலீஸ் பின்வாங்காதென புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷுஹாய்லி மொஹமட் ஜெய்ன் (Mohd Shuhaily Mohd Zain) சொன்னார்.
காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், தற்போதைக்கு அது மிகவும் கவலையளிக்கும் வகையில் இல்லையென அவர் கூறினார்.
போலீசார் தங்களின் கடமையைச் செய்யும் அதே வேளை, பொது மக்களும் குறிப்பாக பெற்றோர்களும் பாதுகாவலர்களும் சிறு பிள்ளைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டுமென மொஹமட் ஷூஹாய்லி கேட்டுக் கொண்டார்.
அதே சற்று பெரியப் பிள்ளைகள் என்றால், அவர்களின் தொடர்பு சாதன பயன்பாடு குறித்தும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக கைப்பேசியில் எந்தெந்த செயலியை அவர்கள் வலம் வருகிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்காலத்தில், சமூக ஊடகங்களில் அளவுக்கதிகமான சுயவிவரங்கள் பகிரப்படுகின்றன.
இதனால் பொறுப்பற்ற தரப்பினரால் பிள்ளைகளும் பெரியவர்களும் கூட ஏமாற்றப்படலாமென ஷூஹாய்லி நினைவுறுத்தினார்.
சமூக ஊடகங்களை மேலும் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும்;
கடத்திச் செல்லப்படுவது, மோசடிக்கு ஆளாவது, குற்றச் சம்பவங்களுக்கு பலியாவதைத் தடுக்க அது மிகவும் அவசியமென்றார் அவர்.