
கோலாலம்பூர், ஜூலை-11 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட்டில் விபச்சார விடுதிகளாக இயங்கி வரும் மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 14 வெளிநாட்டுப் பெண்கள் மீட்கப்பட்டனர்.
புதன்கிழமை இரவு 11 மணி வாக்கில் மேற்கொள்ளப்பட்ட Ops Pantas சோதனையில், 18 முதல் 36 வயதிலான அப்பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் வங்காளதேசிகள், மூவர் இந்தியப் பிரஜைகள், ஒருவர் இந்தோனேசியர் என கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் சாவ்ப்பீ வான் யூசோஃப் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், காதல் முறிவுக்குப் பிறகு காதலன் தம்மை விபச்சார கும்பலிடம் விற்று விட்டதாகக் கூறினார்.
இவ்வேளையில் அந்த அதிரடிச் சோதனையின் போது ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றனர்.
எனினும், 16 ஆண் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர்; அவர்கள் முறையே 9 நேப்பாளிகள், 2 வங்காளதேசிகள், 5 மியன்மார் நாட்டவர்கள் ஆவர்.
தவிர, விபச்சார விடுதிகளின் பாதுகாவலர்கள் என நம்பப்படும் மூவரும் கைதாகினர்.
வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.