கோலாலம்பூர், மே 17 – பழுதடைந்த அல்லது ஓட்டையான காரின் டயரை எவ்வாறு மாற்றுவது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
ஆபத்து அவசர வேளைகளில் மட்டுமல்ல இதர பல சமயங்களிலும் கூட அந்த திறன் நமக்கு உதவலாம்.
அண்மையில், ஆசிரியர் ஒருவர் @ctmyzatulakma எனும் தமது TikTok கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பழுதடைந்த அந்த ஆசிரியரின் காரின் டயரை மாற்ற உதவுகிறார்.
அவர் காரின் டயரை கழற்றி மாற்றுவதை, சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இணைந்து மாணவர்கள் சிலரும் அருகில் இருந்து கற்றுக் கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இம்மாதம் ஒன்பதாம் தேதி, தலைநகர், Sentulலிலுள்ள,Batu Muda தேசிய பள்ளியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவம் தொடர்பான வீடியோ, இதுவரை இரண்டு லட்சத்து 25 ஆயிரம் முறை பார்வையிடப்பட்டுள்ள வேளை ;
பள்ளியை சென்றடைந்ததும் காரின் டயர் பழுதாகி இருப்பதை உணர்ந்த அந்த ஆசிரியருக்கு, அதனை மாற்ற உதவிக் கரம் நீட்டிய சம்பந்தப்பட்ட மாணவனின் செயல் இணையப் பயனர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.