புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-12 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் தெம்பிக்காயில் காருக்குள் 2 பெண்கள் இறந்துக் கிடந்த சம்பவத்திற்கு, ஹீலியம் வாயுவை (helium gas) சுவாசித்ததே காரணம் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
செபராங் ஜெயா மருத்துவமனையின் தடயவியல் துறையில் இன்று காலை நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் அது கண்டறியப்பட்டதாக, மாவட்ட போலீஸ் கூறியது.
முன்னதாக, ஜாலான் தெம்பிக்காயில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் சாலையோரமாக கிடந்த காரினுள், உடல் அழுகி, உப்பிப் போய், பெரும் துர்நாற்றத்துடன் அவ்விருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
சடலங்கள் இருந்த நிலையை வைத்துப் பார்க்கும் போது, அவர்கள் மரணமடைந்து 5 நாட்களாவது ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் பினாங்கிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.
உற்றத் தோழிகளான இருவரையும் காணவில்லை என அவர்களின் குடும்பத்தார் ஜூலை 5-ஆம் தேதி போலீசில் புகாரளித்தனர்.
இந்நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே அது ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.