தாவாவ், ஜூலை-22, சபா, தாவாவில் பெண்ணொருவரது காரின் டயர் பஞ்சரானதாகக் கூறி ‘நல்லவன்’ போல் அவரை நெருங்கிய மர்ம நபர், திடீரெனக் கொள்ளையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைக் காலை 10 மணியளவில் Jalan Pelabuhan Tawau-வில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
நல்லவன் போல் நெருங்கியவன் தன் கழுத்தைப் பிடித்து நெருக்குவான் என அப்பெண் நினைத்திருக்க மாட்டார்.
மர்ம நபர் தன்னிடமிருந்த விலையுயர்ந்தப் பொருட்களைப் அபகரிக்க முயன்ற போது, அவனுடன் போராடிய 32 வயது அப்பெண் சுதாகரித்துக் கொண்டு காரின் horn சத்தத்தை எழுப்பினார்.
அதை அங்கிருந்த பொது மக்கள் சிலர் கவனித்து உதவிக்கு வந்ததோடு, கைப்பேசியில் அவனை வீடியோ எடுத்ததால் அவன் தப்பியோடினான்.
பாதிக்கப்பட்ட பெண் அது குறித்து போலீசில் புகார் செய்ததையடுத்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டு அவன் தீவிரமாகத் தேடப்படுவதாக தாவாவ் மாவட்ட போலீஸ் கூறியது.