
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25 – இந்தியச் சமூகம் காலம் தாழ்த்தாமல் SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையுமாறு, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் திட்டம், நிரந்தர வருமானம் இல்லாத, சுயதொழில் செய்பவர்கள், கிக் பணியாளர்கள்(gig workers) மற்றும் முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் பெற உதவுகிறது.
இத்திட்டத்தின் மூலம், அதிகபட்சம் RM500,000 வரையில், வங்கிகள் 100% அல்லது 110% வரை கடன் வழங்குகின்றன; இதனால் வாங்குபவர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியர்கள் சொந்த வீட்டைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதமரே வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தகுதிப் பெற்ற இந்தியச் சமூகத்தினர் இத்திட்டத்தில் பங்கெடுத்து சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக் கொள்ள முடியும்.
SJKP திட்டத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பில் ம.இ.கா கிளைத் தலைவர்கள், பொது மக்கள் குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கு உதவிட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இந்த அனுகூலம் இலக்கு வைக்கப்பட்ட மகக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய ம.இ.கா அரசாங்கத்துடன் அணுக்கமாக ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.