ஜெலி, ஜூலை-4, கிளந்தான், ஜெலியில் கால்வாக்குள் விழுந்த குட்டி யானை வனவிலங்குத் துறையால் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Jalan Raya Timur-Barat, Batu 13 எனுமிடத்தில் கடந்த ஞ்சாயிறன்று அச்சம்பவம் நிகழ்ந்தது.
வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையான PERHILITAN-னின் கிளந்தான் கிளையைச் சேர்ந்த 8 பேர், குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
குட்டி மீட்கப்படும் போது, தாய் யானை ஒரு அடி கூட நகராமல் கால்வாய் அருகே பொறுமையோடு காத்திருந்தது வீடியோவைப் பார்ப்போரை நெகிழ வைக்கிறது.
கால்வாய்க்குள் தன் குட்டி விழுந்ததால் பதற்றமடைந்தாலும், அதனை மீட்கத்தான் ஆட்கள் வந்திருப்பதை உணர்ந்து, தாய் யானை யாரையும் சீண்டாமல் குட்டியை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தது.
கயிற்றைக் கட்டி மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் ஒருவழியாக குட்டி யானை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதும், அது தாயிடம் துள்ளிக் குதித்தோடியது.
பின்னர் தாயும் குட்டியும் அருகிலிருந்த காட்டுக்குள் சென்று விட்டன.