புத்ராஜெயா, ஜூன் 17 – இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் வாயிலாக கிடைக்கும் பலன்களை, மக்களுக்கு திரும்பத் தரும் முயற்சியாக, நாடு முழுவதும் கிரேட் A,B மற்றும் C முட்டைகளின் சில்லறை விலையை, ஒரு முட்டைக்கு 3 சென்கள் குறைக்க அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
அதன் மூலம், கிரேட் A முட்டை 42 சென்னுக்கும், கிரேட் B முட்டை 40 சென்னுக்கும், கிரேட் C முட்டை 38 சென்னுக்கும் விற்கப்படுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அந்த விலை குறைப்பு, அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி அமலுக்கு வரும்.
மக்களின் உணவுத் தேவைக்கு ஏற்ப, ஒரு கோழி முட்டைக்கு 10 சென் மானியம் வழங்க, அரசாங்கம் பத்து கோடி ரிங்கிட் உதவித் தொகையை ஒதுக்குகிறது.
மாறாக, கடந்தாண்டு நெடுகிலும், கோழி முட்டைக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க உதவித் தொகை 92 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ஆகும்.
இவ்வேளையில், சபா, சரவாக் மாநிலங்களிலும், லாபுவானிலும் கோழி முட்டை விலை, பகுதி மற்றும் மண்டலம் வாரியாக ஒருங்கிணைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.