
கோத்தா பாரு, ஜூலை-17- கிளந்தானில் 100 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை உட்படுத்திய இரகசிய ஒன்றுகூடல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்காலான் செப்பாவில் (Pengakalan Chepa) வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு பங்களா வீட்டில் கடந்த மாதம் அந்நிகழ்வு நடைபெற்றது.
பொது மக்கள் கொடுத்த தகவலை அடுத்து, சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை நடத்திய போலீஸ், சம்பவத்தன்று அதிகாலை 1 மணிக்கு அந்த பங்களாவை முற்றுகையிட்டது.
எனினும், அப்போது 20 ஆண்கள் மட்டுமே அங்கிருந்தனர்.
போலீஸ் சோதனையின் போது அங்கு ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறவில்லை என்றாலும், ஆணுறைகளும், HIV மருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன.
இயற்கைக்கு மாறான உறவுகளுக்கு அவர்கள் தயாராகி வந்தது இதன் மூலம் தெளிவானது.
விசாரித்ததில், ஓரினச்சேர்க்கையாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அந்த 20 பேரும் ஒப்புக் கொண்டனர்.
3 ஆண்களின் கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்களும் கண்டெடுக்கப்பட்டன.
20 முதல் 30 வயதிலான அவர்கள் பல்வேறு தொழில் பின்புலத்திலிருந்து வந்தவர்கள்; ஒருவருக்கு, HIV தொற்று இருந்ததும் கண்டறியப்பட்டது.
கிளந்தானில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்படி பெரும் கூட்டமாக ஒன்றுக்கூடியது இதுவே முதன் முறையாகுமென கோத்தா பாரு போலீஸ் கூறியது.