கோத்தா பாரு, ஜூலை-5 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் டைஃபாய்ட் காய்ச்சல் பரவியதற்கு, உணவுகளைக் கையாண்ட 3 பேரே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
அம்மூவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதோடு, அடுத்து அறிவிக்கப்படும் வரை உணவுகளைக் கையாளக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதாக, மாநில சுகாதார இயக்குனர் டத்தோ Dr சாய்னி ஹுசின் (Datuk Dr Zaini Hussin) கூறினார்.
அப்பள்ளியில் ஜூன் 20-ல் டைஃபாய்ட் காய்ச்சல் பரவத் தொடங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் வரை, முதலாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரையிலான 6 மாணவர்களுக்கு அக்காய்ச்சல் உறுதிச்செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 35 பேருக்கு டைஃபாய்ட் கண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மோசமான அறிகுறிகள் இருந்ததாகவோ மரணம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை என Dr சாய்னி கூறினார்.
அக்காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, அப்பள்ளியின் அனைத்து மாணவர்களும் விரைவிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றார் அவர்.
டைபாய்ட் காய்ச்சல் என்பது, குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினரிடையே முக்கியமாக காணப்படும் ஒரு கிருமித் தொற்றாகும்.
உணவு, பானம் அல்லது மாசுபட்ட குடிநீர் மூலம் அது பரவுகிறது.