கிள்ளான், ஜனவரி-24, கிள்ளான், பூலாவ் இண்டாவில் உள்ள உணவுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்ததில் நால்வர் தீப்புண் காயங்களுக்கு ஆளாகினர்; மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
நேற்று மதியம் 12 மணிக்கு மேல் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
இதையடுத்து 16 பேருடன் பூலாவ் இண்டா தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடம் விரைந்தன.
தொழிற்சாலையின் அமோனியா வாயுக் குழாயின் வால்வு (valve) பகுதியில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வந்து சேருவதற்குள் தொழிற்சாலை நிர்வாகம் தீப்புண் காயங்களுக்கு ஆளான நால்வரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியது.
மூச்சுத் திணறலுக்கு ஆளான மூவரை சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றது.
குழாய் வால்வு கசிவு பிற்பகல் 3.10 மணிக்கு சரி செய்யப்பட்டது.