
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ மொஹமட் டுசுக்கி மொக்தார் தற்காத்துள்ளார்.
மார்ச் 29-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், 28 வயது ஆர். சக்தி கணபதி, மோட்டார் சைக்கிளில் சென்ற p-hailing ஓட்டுநரான அமிருல் ஹபிஸ் ஓமர் (Amirul Hafiz Omar) என்பவரின் உயிரிழப்புக்கு காரணமானார்.
குற்றம்சாட்டப்பட்டவர், வேகக் கட்டுப்பாட்டை மீறி காரோட்டியதோடு, எதிர் திசையில் வேண்டுமென்றே புகுந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளார். மேலும், சம்பவத்தின் போது அவர் மதுபானமும் போதைப்பொருளும் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
“ஆக, எதிர் திசையில் நுழையக் கூடாது என தெரிந்திருந்தும், அந்நபர் அதி வேகத்தில் நுழைந்த செயலானது, இறந்தவருக்கு ‘உடனடி ஆபத்தை உண்டாக்கி’ மரணத்திற்கு வித்திட்டுள்ளது”
எனவே, சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டே, குற்றவியல் சட்டம் 300 (d) பிரிவின் கீழ் சக்தி கணபதி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டதாக டுசுக்கி விளக்கினார்.
“இந்த 300(d) குற்றப் பிரிவானது, கொலை என்பது குற்றவாளி, மிக அருகிலேயே ஆபத்தானது என்பதை அறிந்திருந்தும், அது மரணத்திற்கோ அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உடல் காயத்திற்கோ வழிவகுக்கும் என்பதை முழுமையாக உணர்ந்திருந்தும், எந்த நியாயமும் இல்லாமல் அந்த ஆபத்தை வழியச் சென்று செய்யும் செயல் என வரையறுக்கப்படுகிறது” என்றார் அவர்.
இதே போல், மதுபோதை அல்லது போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய முந்தையச் சம்பவங்களில், அபாயகரமான முறையில் வாகனமோட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இந்த கிள்ளான் சம்பவத்தில் நேரடியாக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், AG அவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சக்தி கணபதிக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.



