கோலாலம்பூர், ஜூலை 11 – கிள்ளான் பள்ளத்தாக்கில், பொது போக்குவரத்து வாகனங்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், முறையான வாகனம் ஓட்டும் உரிமம் இன்றி வாகனத்தை செலுத்திய இரு ஓட்டுனர்கள் பிடிபட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை, காலை மணி ஏழு தொடங்கி, காராக் டோல் கட்டண சாவடி, கோம்பாக் டோல் கட்டண சாவடி மற்றும் TBS பேருந்து முனையத்தை குறி வைத்து, JPJ – சாலை போக்குவரத்து துறை அந்த சோதனையை மேற்கொண்டது.
அந்த சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 57 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டதாக கோலாலம்பூர் JPJ இயக்குனர் முஹமட் ஜாக்கி இஸ்மாயில் (Mohd Zaki Ismail) தெரிவித்தார்.
20 பொது போக்குவரத்து வாகனங்களை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதோடு, இரண்டாவது ஓட்டுனர் இல்லாதது, கண்ணாடிகளில் விரிசல், இருண்ட கண்ணாடிகள், தெழில்நுட்ப குற்றங்கள் ஆகியவையும் அந்த சோதனையின் போது அடையாளம் காணப்பட்டன.
முன்னதாக, ஜூலை இரண்டாம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக, மாபெரும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, JPJ தெரிவித்திருந்தது.
சுற்றுலா பேருந்து நடத்துனர்கள் மேற்கொள்ளும் முறைகேடுகள் அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களை கண்டறிய அந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.