கோலாத் திரெங்கானு, ஜூலை 22 – செத்தியு (Setiu ) மற்றும பெசுட்டிலுள்ள (Besut) 9 வர்த்தக இடங்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருந்த வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்திய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நான்கு சிறார்கள் உட்பட 15 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையில் இரண்டு வயது மற்றும் 3 வயதுடைய சகோதரர்கள் மற்றும் அவர்களது 10 மாத சகோதரியும் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு மாநில குடிநுழைவுத்துறை துணை இயக்குனர் மாட் அமின் ஹசான் ( Mat Amin Hassan ) கூறினார்.
நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய அந்த சோதனை நடவடிக்கை காலை மணி 6 அளவில் முடிவடைந்தது. அந்த நடவடிக்கையின்போது 32 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்னர். பரிசோதனைக்குப் பின் அவர்களது மூன்று பிள்ளைகள் மற்றும் பயண ஆவணங்கள் இல்லாத குழந்தையும் கண்டறியப்பட்டது.
அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தையும் மீறி நாட்டில் தங்கியிருந்தனர். இதனிடையே திரெங்கானுவில் இவ்வாண்டு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 494 சோதனை நடவடிக்கையில் 877 சட்டவிரோத குடியேறிகளும் , அவர்களை வேலைக்கு வைத்திருந்த 22 முதலாளிகளும் கைது செய்யப்பட்ட தகவலையும் மாட் அமின் வெளியிட்டார்.