குளுவாங், ஜூன்-1 – ஜொகூர், குளுவாங்கில் தனது மீன் வளர்ப்புக் குளம் வெடித்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அரோவானா மீன்களை, அவற்றைப் பிடித்த பொது மக்களிடம் இருந்து திரும்பப் பெற அதன் உரிமையாளர் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
அடித்துச் செல்லப்பட்ட மீன்கள் கொஞ்ச நஞ்சமல்ல; அவற்றின் எண்ணிக்கை 15,000 முதல் 18,000 வரை இருக்கும்.
அவ்வளவு மீன்களையும் திரும்பப் பெறுவது என்பது நடக்கும் காரியமல்ல; அதோடு அதுவொரு சிரமமான வேலை என்பதை Ng Ah Phau ஒப்புக் கொண்டார்.
சிதறியோடிய மீன்கள் சிதறியோடியதாகவே இருக்கட்டும் என்றார் அவர்.
மில்லியன் கணக்கில் தனக்கு நட்டம் என்றாலும், அவற்றைப் பிடித்த அல்லது சமைத்து சாப்பிட்ட உள்ளூர் மக்கள் மீது தமக்கு கொஞ்சமும் கோபம் இல்லை என அவர் சொன்னார்.
அடிப்படை வசதித் கட்டமைப்புத் திட்டமே தனது மீன் குளம் வெடிப்பதற்குக் காரணம் எனக் கூறிக் கொண்ட Ah Phau, அது குறித்து அதிகாரத் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
குளத்தில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட அந்த அரோவானா மீன்களைப் பிடித்த ரெங்கம், Kampung Tengah பகுதி வாழ் மக்கள், அவற்றை ஒப்படைப்பதற்கு முன் உரிமையாளரைச் சந்திக்க வேண்டும் என முன்னதாகக் கூறியிருந்தனர்.
தலா பத்தாயிரம் ரிங்கிட் மதிப்பைக் கொண்டதாகக் கூறப்படும் அந்த அரோவானா மீன்கள் தானாக வந்து ‘சிக்கியதில்’ கிராம மக்கள் அவற்றைச் சமைத்து விருந்துண்ட சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது.