குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சையில் அவசர சீர்திருத்தம் தேவை; யுனேஸ்வரனைச் சந்தித்து CCAM கோரிக்கை

புத்ராஜெயா, மே-27,
மலேசியாவில் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை தொடர்பாக அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மலேசியச் சங்கம் CCAM, வலியுறுத்தியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரனை நேரில் சந்தித்த போது, 2016 முதல் தேசிய குழந்தைகள் புற்றுநோய் பதிவேடு பொது மக்கள் அணுக முடியாத நிலையில் இருப்பதாக CCAM நிறுவனர் லாவண்யா கணபதி கவலைத் தெரிவித்தார்.
என்றாலும், தேசிய குழந்தைகள் புற்றுநோய் பதிவேட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் துணையமைச்சரின் திறந்த மனப்பான்மைக்கும் CCAM சார்பில் அவர் நன்றித் தெரிவித்தார்.
சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் மட்டுமே சிகிச்சை வெற்றி விகிதங்களை கண்காணிக்கவும், சிகிச்சை குறைபாடுகளை கண்டறியவும், தேசிய சுகாதாரக் கொள்கைகளை மேம்படுத்தவும் உதவும் என, அவர் அச்சந்திப்பில் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் குழந்தைகள் புற்றுநோய் உயிர் பிழைப்பு விகிதம் தற்போது 45 முதல் 55 விழுக்காடாக மட்டுமே உள்ளதாகவும், முன்னேறிய நாடுகளில் அது 95 விழுக்காட்டைக் கடந்துள்ளதாகவும் லாவண்யா குறிப்பிட்டார்.
பல குடும்பங்கள் சிகிச்சையா அல்லது அன்றாட வாழ்க்கைச் செலவுகளா என்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை தொடர்கிறது என்றார் அவர்.
மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான சிகிச்சை மற்றும் மருத்துவ தகவல் கிடைக்க அரசு, மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த தேசிய அமைப்பு தேவை எனவும் அவர் வலியுறுத்தியுனார்.
அதே நேரத்தில், நேரடி மருத்துவ நிதியுதவி மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய டிஜிட்டல் தளத்தையும் CCAM விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தேசிய குழந்தைகள் புற்றுநோய் பதிவேட்டை மேம்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான வழிகளை ஆராயவும் துணையமைச்சர் யுனேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.



