
ஜோகூர் பாரு, ஜூலை-11-2 வாரங்களாக அனல் பறந்த பிரச்சாரங்களுக்குப் பிறகு, ஜோகூர் மாநிலத் தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்க, 2.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
ஜோகூர் முழுவதும் உள்ள 1,076 வாக்குச் சாவடிகள் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன.
மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்காக 172 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் 70 விழுக்காட்டு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் SPR இலக்காகக் கொண்டுள்ளது.
பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கூட்டணிகள் அனைத்து 56 இடங்களிலும் தனித்து போட்டியிடுகின்றன.
பெரிக்காத்தான் நேஷனல் 33 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தலைமையிலான Bersama கட்சி 15 இடங்களில் போட்டியிடுகின்றது.
மேலும் MUDA, PSM போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன.
எவ்வளவு பேர் வாக்களிக்கப்போகிறார்கள்? மலாய்க்காரர்களின் வாக்குகள் பெருவாரியாக பிரியுமா? சீனர்கள் DAP பக்கமே நிற்பர்களா? போன்ற கேள்விகளுக்கான பதிலே யார் ஆட்சி அமைப்பர் என முடிவு செய்யும். அந்த அடிப்படையில் இத்தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இத்தேர்தலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவமும் முக்கியமாகக் கருதப்படுகிறது;
பாரிசான் சார்பில் ம.இ.கா 4 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், பக்காத்தான் சார்பில் 4 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்குப் புதுவரவான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, பெரிக்காத்தான் சார்பில் 5 இடங்களில் போட்டியிடுகிறது.
தவிர BERSAMA கட்சி சார்பில் 2 இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.
தொகுதி வாரியாகப் பார்த்தால் சுமார் 13 தொகுதிகளில் இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் எத்தனை பேர் வெற்றிப் பெற்று சட்டமன்றம் நுழைவார்கள் எனும் எதிர்பார்ப்பும் சமூகத்தில் மேலோங்கியுள்ளது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 10 மணிக்குள் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாரிசான் கைவசமே நீடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறியுள்ள நிலையில் அது நிஜமாகுமா அல்லது திடீர் ஆச்சரியம் ஏதும் ஏற்படுமா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்…



