Latestமலேசியா

மலேசியாவில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு 34.8% அதிரடி உயர்வு; மரணங்களின் எண்ணிக்கை 79% அதிகரித்து அதிர்ச்சி

கோலாலாம்பூர், ஜூலை-10, நாட்டில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு இவ்வாண்டு 34.8 விழுக்காடு வரை அதிகரித்துள்ள வேளை, அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 79 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கவலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று வரையிலான புள்ளிவிவரங்களின்படி, நாடு தழுவிய அளவில் மொத்தம் 42,848 டெங்கி சம்பவங்களும், 34 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 31,790 சம்பவங்களை விட அதிகமாகும்.

மாநில வாரியாகப் பார்த்தால், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகள் ஒட்டுமொத்த தேசிய பாதிப்பில் 63 விழுக்காட்டைக் கொண்டு மிக ஆபத்தான சிவப்பு மண்டலங்களாகத் தொடர்கின்றன.

சிலாங்கூரில் 19,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இந்த பாதிப்பு 83 விழுக்காட்டுக்கும் மேல் அதிரடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக டெங்கி பாதிப்புள்ள நாடுகளில் ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுழற்சி முறை பாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொது மக்கள் தங்களின் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்றும் KKM அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!