
ஈப்போ, ஜூலை.10- ஈப்போவில் தம்பதியர் ஒருவர் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தீ வைத்துச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும். 34 வயதான எம். தினகரன் மற்றும் பி. ரத்தேனேஸ்வரி இருவரும், கடந்த மாதம் Pekan Razaki, Taman Kledang Suria, Menglembu Bestari ஆகிய மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியும் தீ வைத்தும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா RM50,000 பிணைத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அவ்விருவரும் தங்கள் இயலாமையைக் கூறியதை அடுத்து தலா RM11,000 பிணைத்தொகை அனுமதி கொடுக்கப்பட்டது.
மற்றொரு நீதிமன்ற விசாரணையில் வீடு, கதவு மற்றும் காரின் மீது சிவப்பு வண்ணம் தெளித்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. குற்றத்தை தினகரன் ஒப்புக் கொண்டார். அவருக்கு RM2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வேளையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது சிவப்பு வண்ணம் தெளித்தாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தினகரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு RM2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். ரத்தேனேஸ்வரி குற்றத்தை மறுத்தார். அவருக்கு RM2,000 பிணை வழங்கி, ஆகஸ்ட் 19 அன்று விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டது.
மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வீடொன்றைச் சேதப்படுத்தி நாசவேலை செய்ததாக அந்தத் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தினகரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதேசமயம் ரத்தேனேஸ்வரி குற்றத்தை மறுத்தார். தினகரனுக்கு RM2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். , ரத்தேனேஸ்வரிக்கு ஒரு நபர் உத்ததவாதத்துடன் RM1,500 பிணை வழங்கப்பட்டது.



