Latestமலேசியா

இந்தியா கேட் உணவகத்தின் பெட்டாலிங் ஜெயா கிளைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது

பிரபல இந்திய உணவகச் சங்கிலியான India Gate-இன் பெட்டாலிங் ஜெயா கிளை, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM) வழங்கும் அதிகாரப்பூர்வ ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ளது.

அவர்களின் தொடர் வெற்றிக்கு இது மேலும் ஒரு சிறப்பைச் சேர்த்துள்ளது.

நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போது பெட்டாலிங் ஜெயா மற்றும் IOI புத்ராஜெயா கிளைகள் ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ள வேளையில், தங்களின் மற்ற 6 கிளைகளுக்கான விண்ணப்பங்களும் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளதாக நிர்வாகத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த India Gate நிறுவனரும் இயக்குநருமான சரவணன் சுப்பிரமணியம், ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கு மத்திய சமையலறை தொடங்கி ஒவ்வொரு கிளையின் தனிப்பட்ட செயல்பாடுகள் வரை மிகக் கடுமையான SOP நடைமுறைகளப் பின்பற்ற வேண்டியுள்ளது என்றார்

மேலும், ஹலால் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல என்ற பொதுவான புரிதலையும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஹலால் தரக்கட்டுப்பாட்டில் 20 விழுக்காடு மட்டுமே பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் தொடர்பான தடைகளை உள்ளடக்கியது என்றும், எஞ்சிய 80 விழுக்காடு சமையலறை சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, தரமான கையாளுதல் மற்றும் தினசரி ஆய்வு முறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் விளக்கினார்.

இந்த ஹலால் அங்கீகாரம் மலாய் வாடிக்கையாளர்களின் வருகையை பெருமளவில் அதிகரித்துள்ளதோடு, இனம் கடந்து அனைத்து வாடிக்கையாளர்களிடையேயும் உணவகத்தின் மீதான நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

அண்மையில் புக்கிட் பிந்தாங்கில் தனது 14-ஆவது கிளையைத் திறந்த India Gate வரும் 17-ஆம் தேதி, தனது 15-ஆவது கிளையை IOI Damansara Mall பேரங்காடியில் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!