
கோலாலம்பூர், ஜூலை.10 – பெட்டாலிங் ஜெயா, Sunway Mentariயில் உள்ள தங்கும் விடுதியில் ஆடவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் இருவர் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு 11.23 மணிக்கு தங்கும் விடுதியில் மயக்க நிலையில் இருந்த உள்நாட்டவர் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி கமிஷனர் Shamsudin Mamat தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இறந்து விட்டதாக நம்பப்படும் ஆடவரின் சடலத்தை மீட்டனர். மரணமடைந்த ஆடவரின் உடலில் காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர் 30 வயது மதிக்கத்தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டது. சவப் பரிசோதனையில், உடலில் ஏற்பட்ட பலத்த அடிகளே அவரது மரணத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டதாக Shamsudin கூறினார்.
விசாரணைகளுக்கு உதவும் வகையில், சம்பவ இடத்திலிருந்து பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சம்பவம் தொடர்பில் கைதான 20 மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர்கள் ஜூலை 16 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் குற்றப் பின்னணி இருப்பதும் தெரிய வந்துள்ளது. பிற சந்தேக நபர்களைக் கண்டறியும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



