
வாஷிங்டன், ஜூலை-11-ஈரானால் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
New York Post நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஈரானிய இராணுவ அதிகாரி காசிம் சுலைமானி (Qasem Soleimani) கொல்லப்பட்டதிலிருந்து, தானே ஈரானின் முதன்மை இலக்காக இருப்பதாக அவர் கூறினார்.
_’எனவே, எனக்கு ஏதாவது நடந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத அளவில் ஈரானைத் தாக்க உத்தரவிட்டுள்ளேன்’_ என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனக்கு எதிராகப் புதிய சதித்திட்டங்களை தீட்டியுள்ளதாக வந்த தகவல்களை ட்ரம்ப் மறுத்தாலும், ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் உடனான உறவு நேர விரயம் என்று சாடியுள்ள அவர், அரசதந்திர முயற்சிகள் முற்றிலுமாக முறிந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அதிபரின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரது பயணத் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் குறித்த விவரங்கள் எதையும் வாஷிங்டன் வெளியிடவில்லை.



