
மாரான், ஏப்ரல்-8- கிழக்குக்கரை விரைவுச் சாலையின் 147.3-ஆவது கிலோ மீட்டரில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த வாகனத்தின் கண்ணாடி மீது மோதி 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
நேற்று மதியம் கோலாலம்பூரில் இருந்து குவாந்தான் செல்லும் வழியில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, மாரான் போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் கூறினார். சம்பவத்தின் போது மழை பெய்து கொண்டிருந்தது; அதில், சிறுமியின் 31 வயது தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்று சாலைத் தடுப்பில் மோதியது.
மோதிய வேகத்தில் காரிலிருந்து, எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடி மீது அச்சிறுமி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்தியே உயிரிழந்தாள். 9 வயது மூத்த சகோதரி சிறிய காயங்களுக்கு உள்ளான வேளை, தாய் மற்றும் 39 வயது தந்தை காயமின்றி தப்பினர்.
மற்றொரு காரின் 57 வயது ஓட்டுநர், அவரது 54 வயது மனைவி அவர்களது 11 வயது குழந்தை சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஆபத்தான முறையில் வாகனமோட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதை வோங் கிம் வாய் உறுதிப்படுத்தினார்.