குவாலா கங்சார், ஆகஸ்ட்-12 – பேராக், குவாலா கங்சாரில் கட்டடமொன்றின் மொட்டை மாடியில் தேசியக் கொடி தலைக்கீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, 60 வயது முதியவர் கைதானார்.
ஜாலான் டத்தோ சாகோரில் உள்ள அக்கட்டடத்தில் தங்கியிருப்பவருமான அந்நபர், அச்சம்பவம் வைரலாகி போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைதுச் செய்யப்பட்டார்.
எனினும், முதுமைக் காரணமாக அவர் தவறுதலாக தேசியக் கொடியைத் தலைக்கீழாகக் கட்டியிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.
சந்தேக நபரும் தன் தவற்றை ஒப்புக் கொண்டார்; அன்றைய தினமே கொடியை அவர் சரி செய்தும் விட்டார்.
அதனால் போலீஸ் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாக, குவாலா கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹெய்ஷாம் ஹருண் (Heisham Harun) தெரிவித்தார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் விசாரணைத் தொடருமென்றார் அவர்.