கங்கார், மே 24 – பெர்லீஸ், குவாலா பெர்லீஸ் கடற்கரைப்பகுதியிலிருந்து, 123 கஞ்சா கட்டிகள் அடங்கிய நான்கு சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி கிடக்க காணப்பட்டன.
நேற்று காலை மணி 10.30 வாக்கில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குவாலா பெர்லீஸ் போலீஸ் அதிகாரிகள், அந்த சாக்கு மூட்டைகளை கண்டெடுத்தனர்.
அந்த மூட்டைகள் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் வேளை ; அதில் மொத்த 123.4 கிலோகிராம் எடையிலான கஞ்சா கட்டிகள் இருந்ததாக பெர்லீஸ் மாநில துணைப் போலீஸ் தலைவர் பத்ருல்ஹிசாம் பஹாருடின் தெரிவித்தார்.
அந்த கஞ்சா கட்டிகளின் மொத்த மதிப்பு மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 540 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை இரண்டு லட்சத்து 48 ஆயிரம் போதைப் பித்தர்கள் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
கடல்மார்க்கமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற அந்த கஞ்சா கட்டிகள் தொடர்பில், அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.