கூலிம், மே 16 – கெடா, லூனாஸிலுள்ள, 71 ஆண்டுகள் பழமையான சுங்கை செலுவாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தொழில் பூங்கா விரிவாக்கத்திற்காக இடிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
ஆலயம் அமைந்துள்ள நிலத்தை காலி செய்யுமாறு மாநில அரசாங்கம் தங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின் தலைவர் கே. கிஷோர் குமார் கூறியுள்ளார்.
1953-ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட அந்த ஆலயம், தோட்ட நிர்வாகத்தின் ஒரு பகுதியாக முன்பு சைம் டார்பி நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், அக்கோவில் தற்போது கூலிம் ஹைடெக் பூங்காவின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
அக்கோவில் அமைந்துள்ள நிலம் தற்போது சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமானது இல்லை எனவும், தனியார் நிலத்தை கையகப்படுத்தி இருப்பதாகவும் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு கோவிலை காலி செய்ய நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அது தொடர்பில், மாவட்ட அதிகாரிகள், கூலிம் ஹைடெக் பூங்கா நிர்வாகம், உட்பட மாநில மந்திரி பெசாருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட விட்ட போதிலும் பயனில்லை என கிஷோர் கூறியுள்ளார்.
அந்த கோவிலை இந்துகள் அதிகம் வசிக்கும் தாமான் மக்மூர் பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டிய வசதிகள் செய்து தர வேண்டுமென, கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், அதற்கு பதிலாக தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ள வேளை ; அங்கு ஏற்கனவே ஐந்து ஆலயங்கள் இருப்பதையும் கிஷோர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதோடு, தொழிற்பேட்டையின் புதிய தளத்திற்கு செல்லும் சாலையை அமைப்பதற்காக, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோயிலுக்குச் சொந்தமான மயானத்தையும் மாநில அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாகவும் கிஷோர் கூறியுள்ளார்.
இவ்வேளையில், அந்த ஆலையம் சட்டவிரோதமாக கட்டுப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக மாற்று நிலத்தை தர மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் மாநில சீன, இந்திய மற்றும் சியாமி சமூகத் தலைவர் வோங் சியா ஜென் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில், கூலிம் ஹைடெக் பார்க் மற்றும் மாவட்ட அலுவலகம், கோவில் நிர்வாகம் ஆகியவை கூடி பேச்சு வார்த்தை நடத்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.