
யான், அக்டோபர் 24 –
இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள வீடொன்றில் வங்காளதேச ஆடவர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
37 வயதான அந்த நபர் நேற்று மதியம் 1 மணியளவில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 42 வயதான ஆடவர் ஒருவர் வேலைக்கு தாமதமாக வந்ததால் பாதிக்கப்பட்டவரை கண்டித்தார் என்றும் பின்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதென்றும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர் சமையலறைக்கு சென்று ஒரு பாராங்கத்தியை எடுத்து வந்து அந்நபரைத் தாக்க முயன்றிருக்கின்றார். அதற்கு சந்தேக நபர் அருகிலிருந்த இரும்புக் கம்பியை தரையில் வீசி, பின்னர் மின்கம்பியினால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தை நெரித்துள்ளார். அந்தச் சண்டைக்கு பின்புதான் பாதிக்கப்பட்டவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு, சந்தேக நபர் தானாகவே போலீஸ் நிலையத்துக்குச் சென்று சம்பவத்தைப் பற்றிய அறிக்கை ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் அறுவரை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து ஒரு கம்பி உருள், ஒரு பராங்கத்தி மற்றும் ஒரு இரும்புக் கம்பி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து சந்தேக நபர்களையும் தடுப்பு காவலில் வைப்பதற்கு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.



