பத்து பஹாட், ஜூலை-18 ஜோகூர், பத்து பஹாட்டில் கைப்பேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த 19 வயது ஆடவனுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 24-ங்காம் தேதி செங்காராங்கில் (Senggarang) உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முஹமட் அஃபிக் ஹாக்கிம் முல்யாடி (Muhamad Afiq Hakim Mulyadie) குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
கைப்பேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸ் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அவன் சிக்கினான்.
இதையடுத்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 292-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அவன் முறையிட்ட நிலையில், நீதிபதி 1,000 ரிங்கிட் அபராத்தைத் செலுத்துமாறு உத்தரவிட்டார்.