கோலாலம்பூர், மே 13 – எட்டாயிரம் ரிங்கிட்டை கையூட்டாக வாங்கிய, சார்ஜன் பதவி வகித்த முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, எட்டாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, கோலாலம்பூர் செஷனஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோலாலம்பூர் மகளிர், சிறார் பாலியல் வன் கொடுமை பிரிவின் குற்றப்புலனாய்வு அதிகாரியான, 39 வயது நூர் மஸ்திஷா மைடின்ஷா தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன், நூர் மஸ்திஷா தமக்கு எதிரான அந்த குற்றத்தை மறுத்திருந்தார்.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர் 40 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவன் ஒருவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, நூர் மஸ்திஷா ஆறாயிரம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தார்.
2022-ஆம் ஆண்டு, அக்டோபர் முதலாம் மற்றும் 12-ஆம் தேதிகளில், இரவு மணி எட்டு வாக்கில், செராஸ், பத்து செம்பிலானிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில் அவர் அக்குற்றத்தை புரிந்துள்ளார்.