
பேராக், ஜூலை 28 –பேராக், சிம்பாங் பூலாயைச் (Simpang Pulai) சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர், இன்று கோப்பேங் (Gopeng) அருகே உள்ள கம்பார் (Kampar) ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக, கோப்பேங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத் தலைவர் ஹேமநாதன் (Hemanathan) தெரிவித்தார்.
உயிரிழந்தவர், அமிருல் டேனிஷ் (Amirul Danish) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நண்பர்களான ஃபரீஸ் ஐசாட் (Fariez Aizad), முகமட் அரீஃப் இம்ரான் (Muhamad Arief Imran) மற்றும் ரிட்ஸுவான் ஐடில் (Ridzuan Aidil) ஆகியோருடன், கெபுன் பாக் வான் (Kebun Pak Wan) அருகே உள்ள கம்பார் ஆற்றில் அவர் குளிக்கச் சென்றிருந்தபோது, ஆற்றங்கரையிலிருந்த பாறையிலிருந்து ஆற்றுக்குள் குதித்த அமிருல் டேனிஷ், சில நொடிகளிலேயே நீரில் மூழ்கி, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், சம்பவ இடத்திற்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த வடக்கு FRAM (FRAM Utara) உறுப்பினர்களிடம் உதவி கோரியுள்ளனர்.
உடனடியாக தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய FRAM உறுப்பினர்கள், அவர் குதித்த இடத்திலிருந்து சுமார் 15 முதல் 20 மீட்டர் தொலைவில் அவரைக் கண்டுபிடித்து கரைக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், FRAM உறுப்பினர்களும் கோப்பேங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் இணைந்து, சுகாதார அமைச்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் வரை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து இதய-நுரையீரல் உயிர்காக்கும் சிகிச்சை (CPR) வழங்கினர்.
எனினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி, அமிருல் டேனிஷ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக ஹேமநாதன் மேலும் தெரிவித்தார்.



